முன்னணி நடிகையான தமன்னா – விஜய் வர்மா இருவருமே காதலர்களாக வலம் வருகிறார்கள். இருவருமே தங்களுடைய காதல் குறித்து வெளிப்படையாக பேசிவிட்டார்கள். ஆனால், திருமணம் எப்போது என்பது இன்னும் தெரியாமல் உள்ளது.
இதனிடையே ‘மிர்சாபூர் சீசன் 3’ தொடரில் விஜய் வர்மாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். இது தொடர்பாக அளித்த பேட்டியில் தமன்னா உடனான உறவு, திருமணம் குறித்து பேசியிருக்கிறார் விஜய் வர்மா. அதில் அவர் கூறியிருப்பதாவது:
“தமன்னா உடனான உறவு வலுவாகவும், அன்பாகவும் இருக்கிறது. இருவருமே எங்களுடைய காதல் குறித்து மக்களின் ஆர்வத்தை கவனத்தில் கொண்டுள்ளோம். கடந்த 2005-ம் ஆண்டு ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு மும்பைக்கு வந்தேன். அதே வருடத்தில் தமன்னா மும்பையிலிருந்து கிளம்பி ஹைதராபாத் வந்தார். மும்பை பெண்ணான அவர் ஹைதராபாத்தில் தடம் பதித்தார். ஹைதராபாத்தைச் சேர்ந்த நான், மும்பையில் தடம் பதித்தேன்.
எங்களுடைய உறவு சுவாரசியமிக்கதாக உணர்கிறேன். ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ தொடருக்கு பின் தான் எங்களுக்குள் உறவு மலர்ந்தது. தொடக்கத்தில் சக நடிகர்களாக அறிமுகமாக பின்பு நெருங்கி பழகினோம். திருமணம் என்பது மிகப்பெரிய பொறுப்பு. அது ஒன்றும் பார்ட்டி அல்ல. நேரம் வந்துவிட்டது என்பதாலோ, எல்லோரும் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்பதாலோ மணமுடிக்க கூடாது”
இவ்வாறு விஜய் வர்மா தெரிவித்துள்ளார்.