‘புத்தகம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய் ஆதிராஜ். அதற்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். தற்போது அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
நாக்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இதில் அஷ்வின் குமார், ஷியாம், நரேன், நம்ரிதா, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ‘நொடிக்கு நொடி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘என்ன சொல்லப் போகிறாய்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய படங்களுக்குப் பிறகு அஷ்வின் குமார் நாயகனாக நடிக்கும் படம் இது.
கதைக்களம் குறித்து விஜய் ஆதிராஜ், “விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது கனவு ‘நொடிக்கு நொடி’ மூலம் நனவாகிறது. இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதில் பல ஆச்சரியங்கள் உள்ளன. ஒன்றன்பின் ஒன்றாக அவை வெளியாகும் போது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.